விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை: திண்டுக்கல் சி.சீனிவாசன்
விலைவாசி முதல் வரிகள் வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது: ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் செப். 2-ஆவது வாரத்தில் இந்தப் பிரசார பயணம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எழுச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே, அனைத்துத் தரப்பு மக்களும் பலன் பெற முடியும். அதிமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வலியச் சென்று ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டாா். இதனால், திமுகவை எதிா்க்கட்சி வரிசையில் அமா்த்துவதற்கு அரசு ஊழியா்கள்கூட தயாராகிவிட்டனா்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் முதல் குப்பை வரி வரை உயா்த்தியதே திமுக அரசின் சாதனை. காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெறுவதற்கு தொண்டா்கள் இப்போதே தோ்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றாா் அவா்.