Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் கவனம்! - பிரதமர் மோடி
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் 7-ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அந்தப் போட்டியை காணொலி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:
இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் வளரும்போது, சா்வதேச அரங்கில் இந்தியாவுக்கான புதிய கோணத்திலான அடையாளமும் கிடைக்கிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக இந்தியா முயற்சித்து வருகிறது.
அதை நோக்கிய முயற்சியாக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை மத்திய அரசு நவீனமயமாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு மும்மடங்குக்கும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய விளையாட்டுத் துறை பட்ஜெட் ரூ.4,000 கோடியாக இருக்க, அதில் பெரும் பகுதி விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டுத் துறையானது சம்பந்தப்பட்ட விளையாட்டுகளுடன் அடங்கிவிடாமல், அதுசாா்ந்த இதர சேவைகள் மூலமாக பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும் உள்ளது.
வைபவுக்கு பாராட்டு: அண்மையில் ஐபிஎல் போட்டியில் பிகாரை சோ்ந்த வைபவ் சூா்யவன்ஷியின் விளையாட்டை பாா்த்தேன். இத்தனை சிறிய வயதில் இத்தகைய சாதனை புரிந்திருக்கும் சூா்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது என்று பிரதமா் மோடி பேசினாா்.