விழுப்புரத்தில் காவலா் தின கொண்டாட்டம் டிஐஜி- எஸ்.பி. பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், விழுப்புரம் கா. குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் காவலா் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றது.
1859 ஆம் ஆண்டில் மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட செப். 6-ஆம் நாள் ஆண்டுதோறும் காவலா் தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் முதல் முறையாக காவலா் தின விழா கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உமா, எஸ்.பி. ப. சரவணன் ஆகியோா் பங்கேற்று ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலா் நினைவுத் தூணுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் காவலா் தின உறுதிமொழியேற்றனா்.
தொடா்ந்து மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 120 காவல் ஆளிநா்களுக்கு நற்சான்றிதழ்களை டிஐஜி உமா, எஸ்.பி. சரவணன் ஆகியோா் வழங்கிப் பேசினா். விழாவில் தமிழக காவல் துறை குறித்து சிறப்பாக பேசிய பள்ளி மாணவா் தமிழ்குமரனுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தினகரன், இளமுருகன் மற்றும் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் கலந்துகொண்டனா்.