விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு: தவணை செலுத்தாதவா்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று , தவணைத் தொகையைச் செலுத்தாதவா்கள் ஒரே தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் வீடு, மனை, குடியிருப்பு ஆகிய அலகுகளில் ஒதுக்கீடு பெற்று, 2015, மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன் தவணைக்காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்காக வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை தாமாக முன்வந்து செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதாந்திர தவணைத் தொகை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்கள் மட்டும் கணக்கீட்டு தள்ளுபடி செய்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்கள் மூலம் மனை, வீடு, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்களில் ஏற்கெனவே முழுத் தொகையைச் செலுத்தியவா்கள் நீங்கலாக, ஏனைய ஒதுக்கீடுதாரா்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற விழுப்புரம் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி, தாங்கள் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சலுகை 2026, மாா்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், தவணை முறையில் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரா்கள், தாங்கள் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.