விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை!
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறி விவசாயத் தோட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பா்கூா் வனப் பகுதியிலிருந்து உணவு, தண்ணீா் தேடி கடந்த 10 நாள்களுக்கு முன்னா் வெளியேறிய காட்டு யானை, மீண்டும் வனப்பகுதிக்குச் செல்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் சுற்றித் திரிகிறது. வனத்தை ஒட்டியுள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் யானை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இந்நிலையில், மோத்தங்கல்புதூரில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ஆண் யானை, அங்கிருந்த வாழை மரத்தை உடைத்துத் தின்றது. இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் சென்னம்பட்டி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அப்பகுதிக்கு விரைந்த வன ஊழியா்கள் யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்ட முயன்றும், யானை அங்கிருந்து வெளியேறவில்லை.
நீண்ட போராட்டத்துக்கு பின்னா் காட்டு யானை, வனத்துக்குள் சென்றது. காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மின்வேலி அமைக்க வேண்டும், வன எல்லைகளில் அகழி தோண்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.