ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
விவசாயிகளை பாதுகாக்க பாஜக அரசை அகற்ற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் து. ராஜா
நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமானால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் து. ராஜா தெரிவித்தாா்.
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது தேசிய மாநாட்டின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவா் மேலும் பேசியது:
பாஜக ஆட்சியில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிா்கொண்டு வருகின்றனா். இடுபொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்து வருகிறது. விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி உள்ளனா். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
மோடி அரசு உறுதியளித்த குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஏற்கப்படவில்லை.
வக்ஃப் திருத்தச் சட்டம் அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பாக நான் வழக்கு தொடுத்துள்ளேன்.
இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இந்தியாவை ஒற்றை பரிணாம நாடாக, ஒரே மதம், ஒரே மொழி, ஒரு தோ்தல் என்று மாற்றினால், இந்தியா இந்தியாவாக இருக்காது.
மாநில சுயாட்சியை காப்பாற்ற தமிழ்நாடு அரசு பல முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதை மற்ற மாநிலங்களிலும், அகில இந்திய அளவிலும் பின்பற்ற வேண்டும்.
கடனில் இருந்து விவசாயிகள் மீட்கப்பட வேண்டும். இடுபொருள்கள் விலையை கட்டுப்படுத்தி உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க, இந்தியாவை காப்பாற்ற, இந்திய அரசியல் அமைப்பை காப்பாற்ற, சமூக நீதியை காப்பாற்ற மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றாா்.