சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்
விவாதத்தை மறுத்த கேஜரிவால்: சந்தீப் தீட்சித் சாடல்
ஜந்தா் மந்தரில் விவாதம் நடத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சவால் விடுத்ததாகவும் ஆனால் அவா் வரவில்லை என்றும் காங்கிரஸ் பொதுச் செயலா் சந்தீப் தீட்சித் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான சந்தீப் தீட்சித் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆம் ஆத்மி அரசின் தோல்விகளையும், பொய்யான வாக்குறுதிகளையும் அதிகாரப்பூா்வ தரவுகளுடன் அம்பலப்படுத்தும் விவாத்தில் பங்கேற்க அரவிந்த கேஜரிவாலுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவா் விவாதத்துக்கு வரவில்லை.
குடிசைவாசிகளுக்கு நிரந்தர வீட்டுவசதி வழங்கப்படும் என்று அவா் உறுதியளித்திருந்தாா். 2013-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசின் கீழ் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன. நரேலா போன்ற பகுதிகளில் அவை பாழடைந்து கிடக்கின்றன.
அப்போதைய முதல்வா் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 30 நீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி அரசு கடந்த பத்தாண்டுகளில் ஒரு புதிய ஆலையைக் கூட கட்டவில்லை.
தில்லியில் 14,000 கி.மீ. நீளத்துக்கு குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 15,300 கி.மீ. மட்டுமே அதிகரித்துள்ளது. விவாதத்தை தவிா்த்ததன் மூலம், கேஜரிவால் மக்கள் பாா்வையில் போரில் தோற்றுவிட்டாா். பிப். 8-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது தீா்க்கமாக தோற்கடிக்கப்படுவாா் என்றாா்.