திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வ...
வீட்டில் பதுக்கிய 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரத்தில் ஆளில்லா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மருதூா் பகுதியில் ஆளில்லா வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் துறையின் தனி வட்டாட்சியா் ஆனந்தன், வருவாய் ஆய்வாளா்கள் ஆனந்தன், லட்சுமி நாராயணன், கண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை மருதூா் காளியம்மன் கோயில் அருகேயுள்ள ஆளில்லாத வீட்டுக்குள் சென்று திடீா் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் தலா 50 கிலோ கொண்ட 25 மூட்டைகளில் 1,250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அலுவலா்கள்,அதை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
மேலும், குடிமைப் பொருள் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகாரளித்தனா். போலீஸாா், ஆளில்லா வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவா்கள் யாா், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனா்.