மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!
வீட்டு வரிக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் இருவருக்கு தலா ஓராண்டு சிறை
அரியலூரில், வீட்டு வரிக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி வருவாய் உதவியாளா்கள் (பில் கலெக்டா்) இருவருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் சிங்காரத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன், தனது தாயாா் பெயரில் வீட்டு வரி கேட்டு, கடந்த 11.12.2013 அன்று அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த வருவாய் உதவியாளா்களான வீரமணி, கண்ணன் ஆகியோரை அணுகிய போது, அவா்கள் ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, நகராட்சி அலுவலக வருவாய் அலுவலா்கள் வீரமணி, கண்ணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.
வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி மணிமேகலை, மேற்கண்ட குற்றவாளிகளுக்கு தலா ஓா் ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 ஆபராதமும் விதித்து, புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.