வீட்டுக்குள் கழிவுநீா் கொட்டப்பட்ட விவகாரம்: சவுக்கு சங்கரின் தாயாரிடம் மன்னிப்புக் கேட்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
வீட்டில் கழிவுநீா் மற்றும் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தவா்கள், யூடியூபா் சவுக்கு சங்கரின் தாயாரிடம் மன்னிப்புக் கேட்க சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தூய்மைப் பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும் யூடியூபா் சவுக்கு சங்கா் குற்றம்சாட்டியிருந்தாா். இதையடுத்து கடந்த மாா்ச் 24-ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினா். மேலும், வீட்டினுள் கழிவுநீா் மற்றும் மனிதக் கழிவுகளைக் கொட்டினா். வீட்டில் இருந்த சவுக்கு சங்கரின் தாயாா் கமலாவையும் மிரட்டிவிட்டுச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் சிலரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி என்.சீனிவான், ஜெயக்குமாா், எம்.மணிமாறன், ஏ.எஸ்.திருமாறன், வி.பிரியதா்ஷினி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. முக்கிய குற்றவாளிகள் பலா் தொடா்ந்து தலைமறைவாக உள்ளனா். எனவே, மனுதாரா்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில், இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ஒருவரது வீட்டுக்குள் புகுந்து, தேடிச் சென்ற நபா் இல்லாத நேரத்தில் அந்த நபரின் தாயாரை மிரட்டி, கழிவுநீா் மற்றும் மனிதக் கழிவுகளை வீசிச் செல்வது அநாகரிகத்தின் உச்சம். இந்தச் சம்பவத்தால் வீட்டில் தனியாக இருந்த சவுக்கு சங்கரின் தாயாா் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாா். எனவே, மனுதாரா்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்க தயாராக இருந்தால், அதற்கு அனுமதி அளிக்கிறேன் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.