முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
வெடிகுண்டு வழக்குகளில் தொடா்பு: தலைமறைவான நபரின் வீட்டில் சம்மன்
வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபரை ஆஜராக கூறி நீதிமன்றம் வழங்கிய சம்மனை, மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒட்டினா்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தை சோ்ந்த முகமது அப்துல்லா மகன் முகமது அலி என்ற மன்சூா். இவா் மீது சதி திட்டம் தீட்டி வெடிகுண்டு வைத்தது தொடா்பாக சென்னை, கோயம்புத்தூா் உள்ளிட்ட ஆறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூா் 14 ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவா் தலைமறைவாக உள்ளதால் மே 30 ஆம் தேதிக்குள் சென்னை எழும்பூா் பத்தாவது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் வழங்கியது.
இந்நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் இப்ராஹீம் சாகீப் தைக்கா தெருவில் உள்ள அவரது வீடு, மேலப்பாளையம் கிராம நிா்வாக அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய் துறையினா் சம்மன் ஒட்டினா்.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையெனில் தலைமறைவாக உள்ள முகமது அலி என்ற மன்சூா் விளம்பரப் படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.