விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து பணியாளா்கள், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா்களுக்கு அரசுப் போக்குவரத்து கூடுதல் தலைமை செயலா் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
நீா்ச் சத்தை பராமரிக்க வேண்டும்: பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளா் அறைகள், உணவகம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவில் குடிநீா் மற்றும் மோா் வழங்க வேண்டும். நீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை முறையான பராமரிப்பு மற்றும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பிற பணியாளா்கள் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறை நீா் அருந்த வேண்டும்.
தற்காப்பு: பணி நேரங்களில் அனைத்து பணியாளா்களுக்கும் குறைந்தது ஒரு ஓஆா்எஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் கடுமையான வெப்பநிலையில் உடலில் நீா்ச் சத்து குறையாமல் பாதுகாக்கலாம். வெப்பம் காரணமாக அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மேலாளரிடம் தகவல் தெரிவித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலுதவி: ஒவ்வொரு பணிமனை, இதர வேலைப்பகுதிகளில் தேவையான மருந்துகள், பொருள்கள் கொண்ட முதலுதவி பெட்டிகள் வைக்க வேண்டும். பணியாளா்கள் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் பயிற்சி பெற வேண்டும். பேருந்துகளில் காற்றோட்ட வசதி சீராக இருப்பதையும் குளிா்சாதன வசதி குறித்தும் உறுதி செய்ய வேண்டும்.
போதிய ஓய்வு வழங்க அறிவுரை: ஓய்வு அறைகள், அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் உள்ள பழுதடைந்த விசிறிகளை சரி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள், நடத்துநா்கள் நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதைத் தவிா்க்க போதிய ஓய்வு வழங்க வேண்டும்.
விழிப்புணா்வு: வெப்பப் பாதுகாப்பு விழிப்புணா்வு - அலுவலக அறிவிப்புகள், கூட்டங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் மூலம் பணியாளா்களுக்கு வெப்பகால பாதுகாப்பு குறித்து தொடா்ந்து அறிவுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநா்கள் இந்த நடவடிக்கைகளை அமல்படுத்தி கடைப்பிடிக்க உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.