புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட...
வேங்கைவயல்: `இதனை கூற இத்தனை நாள்கள் எதற்கு?’ போன்ற கேள்விகள் இருக்கின்றன" - பார்த்திபன் சொல்வதென்ன?
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏறத்தாழ இரண்டாண்டு காலம் விசாரணை நடைபெற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்றுபேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீதே குற்றம்சுமத்தப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், 'இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி' எனப் பேசியுள்ளார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
வேங்கை வயல் விவகாரம்:
பார்த்திபன் பேசுகையில், "வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை தாமதமாவதற்கு காரணம் என்ன, இரண்டு பேர் குற்றவாளி என்பதைக் கூற இத்தனை நாட்கள் எதற்கு? போன்ற கேள்விகள் இருக்கின்றன.
நான் பல விஷயங்களுக்காக காவல்துறையினரை அணுகியிருக்கிறேன். எனக்குத் தெரிந்தது என்னவென்றால், காவலர்களுக்கு பல அழுத்தங்கள் உள்ளன. ஒரு விஷயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த விஷயத்தை கவனிக்க வேண்டியதிருப்பதனால், ஏற்கெனவே உள்ள விஷயம் மிகவும் பழைய விஷயமாகிவிடுகிறது. அப்படித்தான் இதில் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.
இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி. இப்போது இதைப் பற்றி மாற்றுக்கருத்து சொல்ல, அதைப்பற்றி வேறொன்று சொல்ல அப்படியே நீண்டுகொண்டே இருக்கும். இதை கடந்து செல்வோம்." என்றார்.
`அரசை ஆதரிப்பது அவசியம்’
மேலும் அவர், "நான் கவனிக்கிறேன், ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியை ஒரு விஷயத்தில் எதிர்க்கின்றனர். பின்னர் அவர்கள் ஆளுங்கட்சியாக மாறும்போது அதே விஷயத்தைச் செய்கின்றனர். ஆக இங்கு எப்போதும் ஆதரிக்கவும் எதிர்க்கவும் ஏதோ ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அது மக்களுக்கு ஒரு தீனியாகவே அமைந்துவிடுகிறது.
அரசை ஆதரித்து ஆதரித்து அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை வாங்கிக்கொள்வது அவசியம் என எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் குற்றம் செய்யும்போது நிச்சயம் சுட்டிக்காட்டவும் வேண்டும்.
ஜல்லிக்கட்டு பிரச்னை போன்றவற்றில் மக்கள் போராட்டத்தில் இறங்கிய பிறகுதான் தீர்வு கிடைத்தது. அதுபோன்ற மக்கள் பிரச்னைகளுக்கு மக்கள் குரல் கொடுக்கத்தான் வேண்டும்." என்றும் பேசினார்.