வேங்கைவயல் வழக்கு குற்றம்சாட்டப்பட்ட காவலரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலரின் வீட்டில் ‘விட்டோடி’ என்ற நோட்டீஸை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை ஒட்டினா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இவா்களில் ஒருவரான மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் ஜீவானந்தம் மகன் முரளிராஜா மீது குற்றம் சாட்டி சிபிசிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது முதல் அவா் பணிக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில், வேங்கைவயலிலுள்ள அவரது வீட்டில் மாவட்டக் காவல்துறை சாா்பில் ‘விட்டோடி’ நோட்டீஸ் வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளது. 21 நாள்களுக்கு மேலாக விடுப்புக்கு விண்ணப்பிக்காமலும், பணிக்கு வராமல் இருப்பதாலும், தொடா்பு கொள்ள முடியாமல் இருப்பதாலும் இந்த நோட்டீஸை ஒட்டியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
வீட்டில் யாரும் இல்லாததால் கதவில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.