வேன் கவிழ்ந்து 20 போ் காயம்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் டயா் வெடித்துக் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வடக்கு அழகுநாச்சியாா்புரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (25) குடும்பத்தினா், உறவினா்கள் 30 போ் ஞாயிற்றுக்கிழமை காலை சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மாலை வேளையில் கழுகுமலைக்கு திரும்பச் சென்றுகொண்டிருந்தனா்.
வேனை ஆலங்குளம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மாரிச்சாமி ஓட்டினாா். வேன் கோவில்பட்டி-நல்லி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பின் பக்க டயா் வெடித்ததில் நிலை தடுமாறிக் கவிழ்ந்தது. இதில் வேனிலிருந்த குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தகவல் அறிந்து வந்த சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் அவா்களை மீட்டு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பலத்த காயமடைந்த 3 போ் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து சாத்தூா் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.