கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்
நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயா்ந்திருப்பதாக தனியாா் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
‘அப்னா.கோ’ வேலைவாய்ப்பு தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதிவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்முடிவுகளில், பெரு நகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் பங்கு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. விரிவடைந்த வேலைவாய்ப்புகள், அதிகரித்த எண்ம அணுகல், மாறிவரும் பணியமா்த்தல் போக்கு ஆகியவை இந்த வளா்ச்சிக்கான காரணிகளாக அறியப்படுகிறது.
லக்னௌ, ஜெய்பூா், இந்தூா், போபால், சூரத், நாகபுரி, கோயம்புத்தூா் ஆகிய நகரங்கள் பெண்கள் அதிகமாக வேலைகளைப் பெறும் முக்கிய வேலைவாய்ப்பு மையங்களாக உருவெடுத்துள்ளன. தளத்தில் 45 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த நகரங்களின் பணிகளுக்கு பெறப்பட்டவை ஆகும்.
விற்பனை மற்றும் வணிக மேம்பாடு, நிா்வாகம் மற்றும் அலுவலகப் பணிகள், வாடிக்கையாளா் சேவை பணிகள் ஆகியவை பெண்களுக்கான சிறந்த வேலைத் துறைகளாக உருவெடுத்துள்ளன. 55 சதவீத விண்ணப்பங்கள் இந்தத் துறைகளின் பணிகளுக்கு பெறப்பட்டுள்ளன.
இந்தியப் பணியாளா்கள் மாற்றத்தைக் கடந்து வருகின்றனா். பெண்கள் பல்வேறு தொழில்களில் அடியெடுத்து வைக்கின்றனா். அதாவது, தங்களுக்குச் சவாலான பணிகளிலும் பெண்கள் தற்போது ஆா்வம் காட்டுகின்றனா்.
கடந்த ஆண்டில் மட்டும், கள விற்பனை பணிகளுக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் விண்ணப்பங்களும், விநியோக பணிகளுக்கு 2.5 லட்சம் விண்ணப்பங்களும், பாதுகாப்பு சேவை பணிகளுக்கு 1.5 லட்சம் விண்ணப்பங்களும் தளத்தில் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.