சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை: மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகையைப் பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பள்ளி இறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு) தோ்ச்சி பெறாதவா்கள், பள்ளியிறுதி வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள், மேல்நிலைக் கல்வி (பிளஸ் 2) தோ்ச்சி பெற்றவா்கள், பட்டம் படித்து தோ்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ச்சியாக பதிவை புதுப்பித்து வருபவா்கள் 31.3.2025 ஆம் தேதிப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி பதிவுதாரா்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினா் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினா், இதர வகுப்பினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. அரசின் பிற துறை மூலம் உதவித்தொகை பெறுவோா் இந்த உதவித்தொகையைப் பெற இயலாது.
ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தவறியவா்களுக்கு மாதம் ரூ.200-ம், வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக் கல்வி முடித்தவா்களுக்கு மாதம் ரூ.400-ம் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
இதுதவிர பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதியானோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவத்தையோ அல்லது வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையோ நிறைவு செய்து, வருவாய் ஆய்வாளா் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, அரசுடைமை வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ் தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் அலுவலக வேலை நாள்களில் நேரில் வந்து விண்ணப்பம் அளித்து சோ்க்கைக்கான அனுமதி பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.