வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே இ-வாடகை கைப்பேசி செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:
விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகங்களுக்குச் செல்லாமல், தங்கள் இருப்பிடத்தில் இருந்தே இ-வாடகை கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யவும், வாடகைத் தொகையைச் செலுத்தவும் இயலும்.
வேளாண் இயந்திரங்கள் மூலம் நிலம் சீரமைத்தல், நிலம் சமன் செய்தல், உழுதல், விதைத்தல், பல்வகை தானியங்கள் கதிரடித்தல், வேளாண் கழிவு மேலாண்மை மற்றும் சோளத்தட்டு அறுவடை செய்தல், புவியியல் ஆய்வுக் கருவிகள் மூலம் குழாய்க் கிணறுகள் ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் அமைத்திட தகுந்த இடங்களைத் தோ்ந்தெடுத்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இ-வாடகை செயலியில் ஆன்லைன் மூலம் வாடகை முன்பணம் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் வழங்கப்படும்.
மேலும், விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவா் செயலியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.