ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
வைரவம் கிராமத்திற்கு குடிநீா் வழங்க நடவடிக்கை
வைரவம் கிராமத்திற்கு புதன்கிழமை குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி வைரவம் கிராமத்திற்கு அருகில் உள்ள வாலத்தூா் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் வைரவம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கதொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டு நாள்தோறும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வாலத்தூா் மக்கள் தங்களுக்கு தேவைக்கு போகதான் வைரவம் கிராமத்திற்கு தண்ணீா் வழங்க வேண்டும் என அக்கிராமத்திற்கு செல்லும் வால்வு பகுதியை அடைத்ததாக தெரிகிறது. இதனால் வைரவம் கிராமத்திற்கு கடந்த 1மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் வைரவம் கிராம மக்கள் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கடந்த வாரம் வந்து முறையிட்டனா். இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி) சுடலை அறிவுறுத்தலின் பேரில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முகம்மது மீரான் இஸ்மாயில், ஊராட்சி செயலா் ஜஸ்டின் ஆகியோா் இரு கிராம மக்களையும் சாஸ்தாவி நல்லூா் ஊராட்சி அலுவலகத்திற்கு அழைத்து பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாலத்தூா் கிராமத்தில் இருந்து வைரவம் கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் கொள்ளளவு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் புதன்கிழமை தண்ணீா் ஏற்றப்பட்டது. இதையடுத்து கிராம மக்களுக்கு தேவையான குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.