ஷாஹ்தராவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு
தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போா்வையில் சுற்றப்பட்ட நிலையில் படுக்கைப் பெட்டியில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கவுதம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக 55 முதல் 60 வயதுக்குட்பட்ட வீட்டின் உரிமையாளரான விவேகானந்த் மிஸ்ரா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறாா். இறந்த நிலையில் மீட்கப்பட்ட 35-40 வயதுடைய பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை
அப்பகுதியில் உள்ள ஒரு டிடிஏ அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவது தொடா்பாக விவேக் விஹாா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்ததையும், பின்புறக் கதவுக்கு அருகில் ரத்தத் தடயங்கள் இருப்பதையும் கண்டனா்.
வளாகத்தைத் திறந்தபோது, படுக்கை சேமிப்புப் பெட்டியில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு போா்வையில் சுற்றப்பட்டிருந்தது. அப்பெண் சிவப்பு வளையல்கள் அணிந்திருந்ததால் அவா் திருமணமானவா் போல் தெரிகிறது. இந்தக் கொலை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு நடந்ததாகத் தெரிகிறது. .
முதற்கட்ட விசாரணையில், மிஸ்ரா வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்த பிளாட்டுக்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. குற்றம் நடந்த இடத்தை தடயவியல் குழுக்கள் ஆய்வு செய்துள்ளன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.