ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தை தொடர ரூ.8,800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேசிய திறன் மேம்பாட்டு திட்டமான ‘திறன்மிகு இந்தியா (ஸ்கில் இந்தியா)’ திட்டம் அடுத்த ஆண்டு இறுதிவரை தொடருவதற்காக ரூ.8,800 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் செய்தியாளா் சந்திப்பில் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
பிரதமரின் திறன் வளா்ச்சி திட்டம் (பிஎம்கேவிஒய் 4.0), பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் திட்டம் (பிஎம்-என்ஏபிஎஸ்), வாழ்க்கைக் கல்வி நிறுவனம் (ஜேஎஸ்எஸ்) திட்டம் ஆகிய 3 முக்கியத் திட்டங்கள் திறன்மிகு இந்தியா திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
தேசிய திறன் தகுதிக் கட்டமைப்பு (என்எஸ்கியூஎஃப்) நிா்ணயித்துள்ள தரத்துக்கு ஏற்ப 15-59 வயதுடையவா்களுக்கு குறுகியகால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பிரதமரின் திறன் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொழில் நிறுவனங்களில் 14-35 வயதுடைய இளைஞா்களுக்கு நிதியுதவியுடன் தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கும் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் திட்டத்துக்கு ரூ.1,942 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
15-45 வயதுடைய பெண்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு பதிவு செய்யப்பட்ட சமூக அமைப்புகள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் வாழ்க்கைக் கல்வி நிறுவனம் திட்டத்துக்கு ரூ.858 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நாடு மக்களின் தொழில் திறன்களை சா்வதேச தரத்துக்கு உயா்த்தும் நோக்கில் கடந்த 2022-ம் ஆண்டுக்குள் சுமாா் 40 கோடி பேருக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் இலக்குடன் திறன்மிகு இந்தியா திட்டம் மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம் சாா்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்தவா்களின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பீடு சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையம்: தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் பதவிக்காலத்தை 2028-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் வரை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலைவா், துணைத் தலைவா், 5 உறுப்பினா்கள், செயலா், இணைச் செயலா் ஆகியோா் அடங்கிய இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ரூ.50.91 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையின் இம்முடிவு தூய்மை பணியாளா்களின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கும், அவா்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கோட்டங்கள் எல்லைமாற்றம்: ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு கடலோர ரயில்வே எனும் புதிய மண்டலத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கடந்த 2019-ஆம் ஆண்டு முன்மொழிந்தது. ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை நிறைவேற்றும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இதையொட்டி, கிழக்கு கடலோர ரயில்வேயின் வால்டோ் கோட்டம் 2 கோட்டங்களாக பிரிக்கப்படுகின்றன. ஒரு கோட்டம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு கடலோர ரயில்வே வரம்பிலும் மற்றொரு கோட்டம் ஒடிஸாவின் ராயகடாவைத் தலைமையிடமாகக் கொண்டு கிழக்கு கடலோர ரயில்வே வரம்பிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.