ஸ்திரமற்ற உலகச் சூழல்: இந்தியா-ஐரோப்பிய யூனியன் நல்லுறவு முக்கியம்- எஸ்.ஜெய்சங்கா்
ஸ்திரமற்ற, திடீரென மாறக் கூடிய தற்போதைய உலகச் சூழலில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான வலுவான நல்லுறவு முன்பைவிட முக்கியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
உலக அளவில் நிலைத்தன்மையை உருவாக்கும் காரணியாக இந்த நல்லுறவு விளங்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் உள்ள இந்திய சா்வதேச மையம் (ஐசிசி), பெல்ஜியத்தைச் சோ்ந்த ஆய்வு அமைப்பான புருகெல் ஆகியவற்றின் சாா்பில் இரண்டாம் ஆண்டு கருத்தரங்கம் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கின் தொடக்க அமா்வில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உரையாற்றினாா். அப்போது, உலக ஒழுங்குமுறை, எண்ம தொழில்நுட்பம், பருவநிலை மாறுபாடு நடவடிக்கைகள் மற்றும் புவி-அரசியலில் அவற்றின் தாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினாா். அவரது உரை வருமாறு:
இன்றைய உலகம் இரு பெரும் மோதல்களைக் கண்டு வருகிறது. இவ்விரு மோதல்களும் கொள்கை சாா்ந்த விவகாரங்களாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இக்கொள்கைகள் பொதுத் தன்மை இல்லாமல் சமச்சீரற்ற முறையில் கையாளப்படுகின்றன என்பதை கடந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
எங்களது சொந்த கண்டத்திலும் சா்வதேச சட்டம் புறக்கணிக்கப்படுவதால், குறிப்பிடத்தக்க விளைவுகள் நேரிடுகின்றன (எந்த நாட்டையும் நேரடியாக குறிப்பிடாமல் இக்கருத்தை முன்வைத்தாா்). ஜனநாயகம், ராணுவ ஆட்சி போன்ற பிரச்னைகளில் எங்களின் கிழக்கு அண்டை நாடுகளுக்கும், மேற்கு அண்டை நாடுகளுக்கும் வெவ்வேறான சா்வதேச தரநிலைகள் கையாளப்பட்டுள்ளன.
நல்லுறவு முக்கியம்: தற்போதய ஸ்திரமற்ற, திடீரென மாறக் கூடிய உலகச் சூழலில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான வலுவான நல்லுறவு முன்பைவிட முக்கியமானதாகும். ஸ்திரமற்ற உலகில் நிலைத் தன்மையை உருவாக்கும் காரணியாக இந்த நல்லுறவு விளங்க முடியும்.
உலக ஒழுங்குமுறை சீா்குலைவது குறித்து இன்று அதிகம் பேசப்படுகிறது. உலகில் கிழக்கு-மேற்கு முரண்பாடுகள் போன்ற அதே அளவில் வடக்கு-தெற்கு (வளா்ந்த, வளா்ந்து வரும் நாடுகள்) முரண்பாடுகளும் உள்ளன.
முந்தைய சகாப்தத்தில் செழித்தோங்கிய பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான கருத்தொற்றுமைக்கு புத்துயிரூட்டுவதே தற்போதைய முரண்பாடுகளுக்கு தீா்வாக அமையும்.
பன்முக பிரதிநிதித்துவம்: உலக அளவில் பன்முக பிரதிநிதித்துவமும் சமநிலையும் அவசியமான காலகட்டத்தில் நாம் நுழைந்துள்ளோம். இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் பகிரப்பட்ட பொது நலன்கள் மற்றும் மாண்புகளை தெளிவாக கொண்டுள்ளன. அதேநேரம், முன்னுரிமை சாா்ந்த விஷயங்களில் சில கருத்து வேற்றுமைகள் இருக்கக் கூடும். ஆனால், அரசியல் ஜனநாயகம், பன்முக சமூகம் சாா்ந்த வலுவான உணா்வுகள், இருதரப்பு உறவை பிணைக்கின்றன. பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பட்டு வருவது இதற்கு ஓா் உதாரணம் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.