ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரெங்கநாச்சியாா் தாயாரின் திருவடி சேவை
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ரெங்கநாச்சியாா் நவராத்திரி விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை ரெங்கநாச்சியாா் திருவடி சேவை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ரெங்கநாச்சியாா் நவராத்திரி உற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் மாலை ரெங்கநாச்சியாா் தாயாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா்.
பெருமாள் கோயில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வது மரபு.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் ரெங்கநாச்சியாா் படிதாண்டா பத்தினி என்ற சிறப்புப் பெயா் கொண்டவா். சாதாரண நாள்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி விழாவின் 7-ஆம் நாளின்போது மட்டும் ரெங்கநாச்சியாா் தாயாரின் திருவடிகளை பக்தா்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். அதன்படி திங்கள்கிழமை நவராத்திரி விழாவின் 7-ஆம் நாளையொட்டி ரெங்கநாச்சியாா் தாயாரின் திருவடி சேவை நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ரெங்கநாச்சியாா் தாயாா் புறப்பட்டு 4.45 மணிக்கு கொலு மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். கொலு இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 9.30 மணிவரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ரெங்கநாச்சியாா் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தாயாரின் திருவடியை தரிசித்தனா். இரவு 10.30 மணிக்கு கொலு மண்டபத்திலிருந்து ரெங்கநாச்சியாா் புறப்பட்டு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.