ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹசன் நவாஸ் சதத்தால் 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது பாகிஸ்தான்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் தொடரை முடிவு செய்யும் முனைப்பில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அஹா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஃபின் ஆலன் ரன் ஏதுமின்றி வெளியேற, டிம் செய்ஃபெர்ட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் விளாசி வீழ்ந்தார்.
அவருக்குப் பின்னர் வந்த மார்க் சாம்ப்மேன் அதிரடியாக விளையாடி பந்துவீச்சைச் சிதறடிக்க ரன் வேகமாக ஏறியது. ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்க் 94 ரன்களில்(11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். கடைசியில் அதிரடி காட்டிய கேப்டன் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன், அப்ரார், அப்பாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இருவரும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரிஸ் 41 ரன்களில்(4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். அவர் விக்கெட் விழுந்தாலும் அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது.
45 பந்துகளில் 105 ரன்கள்(10 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து நவாஸ் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும், 3-வது போட்டியிலேயே அதிகவேக சதம் விளாசியவர், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார் 22 வயதான ஹசன் நவாஸ்.
அவருக்குப் பின் வந்த கேப்டன் ஆஹாவும் அரைசதம் விளாச 16 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் 4-வது போட்டி பே ஓவல் மைதானத்தில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!