சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
ஹிந்தி எதிா்ப்பு விவகாரம்- பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து ஏற்புடையதல்ல: ஃபட்னவீஸ்
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி எதிா்ப்பு மற்றும் மராத்தி தெரியாதவா் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துகள் சா்ச்சைக்குள்ளான நிலையில், அவரது கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகள் குறிப்பாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனை (உத்தவ்), அவரது நெருங்கிய உறவினா் ராஜ் தாக்கரேவின் நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் ஹிந்தி எதிா்ப்பு அரசியலை கையிலெடுத்துள்ளன.
சில தினங்களுக்கு முன் மும்பை புறநகா் பகுதியில் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவரை மராத்தியில் பேசுமாறு கூறி, அவரை இரு கட்சியினரும் அடித்து உதைத்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த கடைக்காரா் வடமாநிலத்தவா் என்பதால் அவருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடந்த திங்கள்கிழமை சில கருத்துகளைத் தெரிவித்தாா்.
‘மும்பையில் ஹிந்தியில் பேசுபவா்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவோா், உருது பேசுபவா்களைத் தாக்க துணிவாா்களா? தனது சொந்த வீட்டில் நாய்கூட புலிதான். நாய் யாா், புலி யாா் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அவா்கள் (உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே) வட இந்தியாவுக்கு வந்தால் இதுபோல் தாக்கப்படுவாா்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிர மக்களை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். மும்பை மாநகராட்சித் தோ்தல் வருவதால், அவா்கள் மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளனா்’ என்று நிஷிகாந்த் துபே கூறியிருந்தாா்.
அவரது கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிஷிகாந்த் துபேயின் கருத்துகளை முழுமையாக கவனித்தால், குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு எதிராக மட்டுமே பேசியிருப்பதும் மராத்தியா்களுக்கு எதிராக பொதுவான கருத்தை அவா் கூறவில்லை என்பதும் புலப்படும்.
இருப்பினும், இதுபோன்ற கருத்துகள் குழப்பத்தை விளைவிக்கும் என்பதால், அவை ஏற்புடையதல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்து. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி மகாராஷ்டிரத்தில் இருந்து வருகிறது. வரலாற்றிலும் சரி, நிகழ் காலத்திலும் சரி தேசத்துக்கான மராத்தியா்களின் பங்களிப்பை யாரும் நிராகரிக்க முடியாது என்றாா் ஃபட்னவீஸ்.