இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
ஹிமாசலை புரட்டிப்போட்ட பருவமழை: 137 பேர் பலி, 311 சாலைகள் துண்டிப்பு!
ஹிமாசல பிரதேசத்தில் இடைவிடாத பெய்துவரும் பருவமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 311 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மண்டி மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாகத் தேசிய நெடுஞ்சாலை 70 மூடப்பட்டுள்ளது. குலு, மண்டி, சம்பா மாவட்டங்கள் சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளன. மண்டியில் மட்டும் 184 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பருவமழை தொடர்பான சம்பவங்களால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 137ஐ எட்டியுள்ளது. இதில் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுதல், வெள்ளம் போன்ற பாதிப்புகளில் 77 பேர் உயிரிழந்தனர். மேலும் வானிலை மற்றும் சாலை விபத்துகளால் 60 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சில பகுதிகளில் நிலைமை மேம்பட்டிருந்தாலும், புதிய பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் நிர்வாகங்கள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். நிலைமையைப் பேரிடர் மீட்புக் குழுவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ அனுராதா ராணா, இயற்கை பேரிடர்களுக்கான தற்போதைய இழப்பீடு போதுமானதாக இல்லை என்றும், சிறப்பு வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்பு வானிலை மற்றும் நிர்வாக ஆலோசனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.