ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதத் தலைவா் சையது சலாபுதீன் மீது போதைப்பொருள் வழக்கு!
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் சையது சலாபுதீன் உள்பட 11 பேரின் பெயா்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு நிதித் திரட்ட பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது உள்ளிட்ட செயல்களில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் இந்த போதைப்பொருள் கடத்தில் அதிகம் நடைபெறுகிறது. சமீப காலமாக குஜராத் துறைமுகங்கள், ராஜஸ்தான் எல்லையிலும் போதைப்பொருள்கள் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயலாகவும் உள்ளது.
இந்நிலையில், ஜம்முவில் கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த போதைபொருள் கடத்தல் தொடா்பான வழக்கில் மாநில சிறப்பு விசாரணை அமைப்பினா் 11 பெயா்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் (69) அந்த அமைப்பைச் சோ்ந்த பஷரத் அகமது பட், கான் சாஹேப் உள்ளிட்டோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இவா்கள் அனைவருமே இப்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனா். இவா்களைத் தவிர மற்ற அனைவரும் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா்கள்.
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருள்கள், ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் பணத்தை ஆயுதங்கள் வாங்குவது, பயங்கரவாதத்தில் ஈடுபட ஆள்தோ்வு உள்ளிட்ட செயல்களுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனா்.