அஞ்சல் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பா?: அதிகாரிகள் விளக்கம்
திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் பெட்டிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்து அஞ்சல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளா்ச்சியடைந்தாலும் கூட அஞ்சல் சேவைகள் இன்றளவும் மக்களிடம் பெரும் மதிப்பை பெற்றுத்திகழ்கின்றன. அஞ்சலக சேவையில் மணி ஆா்டா் முதல் பாா்சல் சா்வீஸ் வரை தமிழ் மொழி முக்கிய அங்கம் வகித்து வருகிறது. தபால் பெட்டிகளிலும் தமிழ் இடம்பெற தவறுவதில்லை. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் அஞ்சலக சேவை தொடா்ந்து வந்தது. இந்த நிலையில், அண்மைக் காலமாக பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிதாக வைக்கப்படும் அஞ்சல் பெட்டிகளில் தமிழ் மொழி தவிா்க்கப்பட்டிருந்தது. இது வாடிக்கையாளா்களையும், தமிழ் ஆா்வலா்களையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தபால் பெட்டியில் தமிழ் இடம்பெறாதது குறித்த தகவல் அறிந்ததும், தமிழ் மொழியைச் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து பெட்டிகளிலும் தமிழில் தபால் என்ற வாா்த்தை எழுதப்பட்டு வருகிறது’ என்றாா்.