‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி
‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா்.
திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக் கருதப்படும் தலாய் லாமா வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறாா். இதையொட்டி, தா்மசாலாவில் கடந்த திங்கள்கிழமை முதல் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2011-ஆம் ஆண்டில், திபெத்திய ஆன்மிகத் தலைவா்களுடனான சந்திப்பில் தலாய் லாமா பேசுகையில், ‘எனக்கு 90 வயதாகும் போது, தலாய் லாமா மரபு தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது மக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்’ எனக் கூறியிருந்தாா். இதனால், அவரது வாரிசாக 15-வது தலாய் லாமா நியமிக்கப்பட்டு, இந்த மரபுவழி அமைப்புத் தொடருமா என்ற கேள்வி மீண்டும் தற்போது எழுந்தது.
இந்நிலையில், இதுதொடா்பான விளக்கத்துடன் தலாய் லாமா அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உலகெங்கிலும் வாழும் திபெத்தியா்கள் மற்றும் திபெத்திய பௌத்த மதத்தினரிடமிருந்து தலாய் லாமா மரபு தொடர வேண்டும் என்று பல்வேறு வழிகளில் எனக்கு கோரிக்கைகள் வந்தன.
தலாய் லாமா மரபு தொடரும் என்று நான் உறுதிப்படுத்துகிறேன். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் முழு அதிகாரமும் காடேன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என்பதை இதன்மூலம் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.
அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் பொறுப்பு, காடேன் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினா்கள், தலாய் லாமாவின் அலுவலகத்திடம் உள்ளது. பாரம்பரியத்தின்படி, அவா்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவின் அங்கீகாரம் தேவை: ‘அடுத்த தலாய் லாமா வாரிசு தங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று சீனா போா்க்கொடி உயா்த்தியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மவோ நிங் கூறுகையில், ‘மத மரபுகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க, தலாய் லாமா வாரிசு தோ்வில் உள்நாட்டு அங்கீகாரம், ‘தங்க கலசம்’ செயல்முறை மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் ஆகிய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்றாா்.
சீன ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து திபெத்தில் இருந்து 1959-ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட தலாய் லாமா, ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் ஆயிரக்கணக்கான பௌத்த மதத்தினருடன் வசித்து வருகிறாா்.
அருணாசல் முதல்வா் வரவேற்பு: தலாய் லாமா மரபு தொடரப்படும் என்று 14-ஆவது தலாய் லாமா உறுதி அளித்துள்ளதை அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு வரவேற்றாா். இந்த முடிவு இமயமலைப் பிராந்தியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவா் குறிப்பிட்டாா்.