கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரே...
"அடுத்த போட்டியில் ஆடுவேனா என்று எனக்கே தெரியாது" - இங்கிலாந்தைச் சுருட்டிய இந்திய பவுலர் ஓபன் டாக்!
இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் முதல் இரண்டு நாள்களில் 10 விக்கெட் இழப்புக்கு 587 ரன்கள் குவித்தது.
அதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் முடிவில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதில், ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், நேற்று (ஜூலை 4) மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் சிராஜ்.
84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி ஃபாலோ ஆனை தவிர்க்க யாராவது சரிவிலிருந்து மீட்பர்களா என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், ஹாரி ப்ரூக்கும், ஜேமி ஸ்மித்த்தும் இணைந்து 300+ பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை நோகடித்தனர்.
இதனால், ஃபாலோ ஆனை இங்கிலாந்து எளிதாகக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில் ஹாரி ப்ரூக்கை 158 ரன்களில் கிளீன் போல்டாக்கி ஆட்டத்தை மீண்டும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் ஆகாஷ் தீப்.
இங்கிலாந்திடம் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் அடுத்த 20 ரன்களில் காலி. இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் மட்டும் 184 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
இந்திய அணியில், சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், முக்கியமான நேரத்தில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் கைக்குள் கொண்டுவந்த ஆகாஷ் தீப், "இந்த டெஸ்டில் இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறது.
இந்தப் போட்டி எங்களின் வெற்றிக்கு மிக முக்கியமானது. அதனால், மூன்றாவது போட்டியைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.
எனவே, இந்த இரண்டு நாள்களில் என்ன ஆற்றலை வெளிப்படுத்துவேன் என்று நான் நம்புகிறேன்.

அடுத்த போட்டியில் நான் விளையாடுவேனா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை அணிதான் முடிவெடுக்கும்.
போட்டிக்கு முந்தைய நாள்தான் அது எங்களுக்குத் தெரியும்." என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப், இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.