அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டுக்காக அலெக்ஸாண்டா் சோா்லோத் 3-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, கானா் கலாகா் 45-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.
ராயோ தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், ஜூலியன் அல்வரெஸ் 77-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் மேலும் கோல்கள் ஸ்கோா் செய்யப்படாத நிலையில், இறுதியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 என வென்றது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது அட்லெடிகோ மாட்ரிட் 66 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், ராயோ வால்கேனோ 41 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்திலும் உள்ளன.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் ரியல் பெட்டிஸ் 5-1 கோல் கணக்கில் வல்லாடோலிடை சாய்த்தது. ரியல் பெட்டிஸுக்காக ஜீசஸ் ரோட்ரிகெஸ் 17-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, வல்லாடோலிட் தரப்பில் சுகி 41-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
இந்நிலையில் 2-ஆவது பாதியில் ரியல் பெட்டிஸ் வரிசையாக கோலடித்து முன்னிலையை அதிகப்படுத்தியது. சுகோ ஹொ்னாண்டஸ் (64’), இஸ்கோ (66’), ரோமெய்ன் பெராடு (84’), அப்தே எஸால்ஸுலி (90’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, இறுதியில் ரியல் பெட்டிஸ் 5-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் ரியல் பெட்டிஸ் 54 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், வல்லாடோலிட் 16 புள்ளிகளுடன் கடைசியாக 20-ஆவது இடத்திலும் உள்ளன.