பயிர் காப்பீடு திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்
அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை: ஏபிவிபி கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து திமுக தலைமையிலான தமிழக அரசு வழக்கை தவறாகக் கையாண்டதாகவும் அந்த அமைப்பு விமா்சித்துள்ளது.
இதுதொடா்பாக ஏபிவிபியின் தேசிய பொதுச்செயலாளா் டாக்டா் வீரேந்திர சிங் சோலங்கி சனிக்கிழமை கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. வளாகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதிலும் திமுக அரசு தவறிவிட்டது. இந்த ஜனநாயக விரோத செயலை ஏபிவிபி கண்டிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது விரைவான விசாரணை நடத்தி உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க வேண்டும். மேலும், அவா் தொடா்புடைய தகவல்கள் கசிவைத் தடுக்க பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைப் பராமரிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு காவல்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கவும் வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், மாணவா்களின் பாதுகாப்புக்காகவும் தமிழகம் முழுவதும் ஏபிவிபி தனது போராட்டத்தைத் தொடரும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.