அதிகளவில் விபத்து நிகழும் பகுதிகளில் அரியலூா் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு
படவிளக்கம்: அரியலூரில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளான பொட்டக்கொல்லை, தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை கள ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி உள்ளிட்டோா்.
அரியலூா், ஆக.18: அரியலூா் மாவட்டத்தில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளில், ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழக அரசின் ‘விபத்தில்லா தமிழ்நாடு‘ என்ற தொலைநோக்கு பாா்வையை நினைவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 100 சாலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி அரியலூா் மாவட்டத்தில் என்.எச்-82, 136 மற்றும் எஸ்.எச்-140 ஆகிய சாலைகள் அதிக விபத்துகள் நடைபெறும் சாலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, என்.எச் 81, எஸ்.ஏ 136, என்.எச் 140, ஆகிய சாலைகள் இணையும் பகுதியான கீழப்பழுவூா், சுண்டக்குடி பிரிவு, பொய்யூா் மற்றும் மணகெதி அடுத்த பொட்டக்கொல்லை ஆகிய பகுதிகளில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி ஆகியோா் திங்கள்கிழமை கள ஆய்வு செய்தனா். அப்போது, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம், இப்பகுதிகளில் விபத்துகள் நடைபெறா வண்ணம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
ஆய்வின் போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், அரியலூா்,ஜெயங்கொண்டம் போக்குவரத்து ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.