``அதிக சொத்து யாருக்கு?'' - தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தவிடாமல் 4 சகோதரர்கள் அடிதடி..
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சரஸ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜலுபாய் (78) நேற்று முன் தினம் இறந்து போனார். அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.
ஜலுபாய் தனது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்து தனது பிள்ளைகளுக்காக சொத்து சேர்த்து வைத்திருந்தார். ஜலுபாய் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்தது.
அப்போது சொத்தை பங்கிட்டுக்கொள்வ்து தொடர்பாக ஜலுபாய் மகன்கள் ராஜேஷ், அசோக், சுரேஷ், மகேஷ் அகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் நான்கு பேரும் அடிதடியில் இறங்கினர்.
தந்தையின் இறந்த உடம்பை அருகில் வைத்துக்கொண்டு மகன்கள் அடிதடியில் ஈடுபட்டனர். வீட்டில் கிடந்த பொருள்களை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இதனால் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீஸார் விரைந்து வந்தனர். ஜலுபாய் உடல் பல மணி நேரம் கவனிப்பாரற்று கிடந்தது. போலீஸார் வந்து தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சகோதரர்களை சமாதானப்படுத்தினர். அதன் பிறகு உடல் இறுதிச்சடங்கிற்காக இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கேயும் நான்கு சகோதரர்களும் சண்டை போட்டுக்கொண்டனர்.
அங்கேயும் அடிதடியில் இறங்கினர். இதையடுத்து கிராமத்து பெரியவர்கள் நாங்களே இறுதிச்சடங்கை முடித்துவிடுவோம் என்று நான்கு பேரையும் மிரட்டினர். ஆனாலும் அவர்கள் சண்டையை நிறுத்தவில்லை. இதையடுத்து மீண்டும் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீண்டும் போலீஸார் விரைந்து வந்தனர்.
எந்தவித பிரச்னையும் இல்லாமல் இறுதிச்சடங்கு நடைபெற இரண்டு சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு ஜலுபாய் இறுதிச்சடங்கு எந்த வித பிரச்னையும் இல்லாமல் நடந்தது.

சகோதரர்கள் பயன்படுத்திய வாகனத்தில் ரத்தக்கரை படிந்திருந்தது. சொத்துக்காக சகோதரகள் இடுகாட்டில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், "தந்தை சேர்த்து வைத்த சொத்தில் யாருக்கு அதிக பங்கு என்பதில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இந்த சண்டைகளுக்கு காரணம்" என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் மகன்கள் தந்தையின் இறுதிச்சடங்கை செய்வதில் மோதிக்கொண்டனர். அதில் ஒரு மகன் தனது தந்தையின் பாதி உடம்பை தன்னிடம் கொடுக்கவேண்டும் என்று தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.