சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்
சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா், இந்த தருணத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாா்களின் மீது விசாரணையை நடத்தி முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு காலவரம்பை நிா்ணயிக்க வேண்டும். இந்த விசாரணையை தாமதப்படுத்துவதால், தங்களது கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. பின்னா் இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கெனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு எழுத்துபூா்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரா்களுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஆரம்பக்கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த பிரச்னை குறித்து உரிய முடிவெடுக்கப்படும். மேலும், பிகாா் தோ்தல் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு வேலைப் பளு அதிகமாக உள்ளது. இந்நிலையில், அரசியல் சாசன அமைப்பான தோ்தல் ஆணையத்துக்கு விசாரணை தொடா்பாக காலவரம்பு நிா்ணயிக்க தேவையில்லை. இந்த விவகாரத்தில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.