ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!
சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!
மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.
கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான அச்சுதானந்தன் (101), மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் காலமானார்.
இவரின் எளிமையைப் பற்றி பேசுகையில், கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, அப்போதைய கேரள முதல்வராக இருந்த 85 வயது அச்சுதானந்தன், பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரையிலான மலைப்பகுதியில் நடந்தே சென்ற சம்பவத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
மிகவும் வயதான கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன், அன்று மாலை சரியாக 5.45 மணியளவில் மலையேற்றத்தைத் தொடங்கினார். அவருடன் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி, எம்.எல்.ஏ.க்கள் ராஜு ஆபிரகாம், கே.சி. ராஜகோபால் உள்ளிட்டோரும் சென்றனர்.
தேவஸ்தான அதிகாரிகள் அச்சுதானந்தனை அழைத்துச் செல்வதற்காக பம்பையில் டோலியை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அனைத்தையும் மறுத்த அச்சுதானந்தன், பம்பையில் இருந்து சன்னிதானம் வரை இடைநிற்காமல் நடந்தே சென்றுள்ளார்.
அவருடன் சென்ற மூத்த மருத்துவர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் அனைவரும் மெதுவாகச் செல்லும்படியும், ஓய்வெடுத்துச் செல்லவும் வலியுறுத்திக் கொண்டே சென்றுள்ளனர். ஆனால், தன்னை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்திய அச்சுதானந்தன், வழிநெடுங்கிலும் பக்தர்களுடன் உரையாடிக் கொண்டே சென்றுள்ளார்.
நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற கடுமையான மலைப் பகுதிகளைக் கடக்கும்போது, அச்சுதானந்தனின் வேகத்துக்கு இளம் அதிகாரிகளால்கூட ஈடுகொடுக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
சன்னிதானத்தை அடைந்த அச்சுதானந்தனுக்கு வாணவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் ’அச்சுதானந்தன் சுவாமி’ சன்னிதானம் வந்துள்ளார் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மலையேற்றத்துக்கு முன்னதாக, பம்பையில் ஈசிஜி மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகளை அச்சுதானந்தன் செய்துகொண்டார்.
பின்னர் இரவு 8.30 மணியளவில் தேவஸ்தானத்தின் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சுதானந்தன், முன்னதாக அவர் மேற்கொண்ட தொலைதூர காடுகளின் மலைகளில் ஏறியதைக் குறிப்பிட்டு, பூயம்குட்டி அல்லது மதிகெட்டான் மலையேற்றத்தைவிட கடினமாக இல்லை எனத் தெரிவித்தார்.
அவரின் சபரிமலை யாத்திரை அவரின் சித்தாந்த நிலைபாட்டின் வலிமைக்கு ஒரு சான்றாக அமைந்தது.