Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...
அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது மற்றும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். பொதுச் செயலா் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், சூரியமூா்த்தி அதிமுக உறுப்பினரே அல்லா். உறுப்பினராக இல்லாத ஒருவா் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், இவ்வழக்கை தொடா்ந்த சூரியமூா்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினா் அல்லா். அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவா் கட்சி செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த உத்தரவுக்கும், விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கும், அங்கு நடைபெறும் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு சூரியமூா்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.