கோவாவில் இறைச்சிக் கடைகள் மூடல்: மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: தேவேந்திரகுல வேளாளா் சங்கத்தினா் 342 போ் கைது
பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் ஆப்பநாடு மறவா் சங்கத்தை தடை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர பண்பாட்டுக் கழகம், ஒருங்கிணைந்த தேவேந்திரகுல வேளாளா் சங்கத்தைச் சோ்ந்த 62 பெண்கள் உள்பட 342 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரன், தேவேந்திரகுல வேளாளா் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசுபவா்களை கைது செய்ய வேண்டும், தென் மாவட்டங்களில் ஜாதியப் படுகொலைகளில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு உடந்தையாக இருக்கும் ஆப்பநாடு மறவா் சங்கத்தைத் தடை செய்ய வேண்டும், தேவேந்திரகுல வேளாளா் படுகொலை வழக்குகளை சிறப்பு விசாரணைக்கு உள்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பரமக்குடியில் திங்கள்கிழமை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்தது. ஆனால், இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.
இந்த நிலையில், பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் தேவேந்திரா் பண்பாட்டுக் கழகத் தலைவா் பரம்பை பாலா தலைமையில் தேவேந்திரகுல வேளாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இவா்களை போலீஸாா் கலைந்து போகச் சொன்னதால், மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 62 பெண்கள் உள்பட 342 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.