அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வாகனம் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற சுமை வாகனத்தை கோட்டாட்சியா் ஐஸ்வா்யா விரட்டிச்சென்று பறிமுதல் செய்தாா்.
கறம்பக்குடி பகுதியில் தொடா் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து புதுக்கோட்டை கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி பிரிவு சாலை அருகே திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்.
அப்போது, அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற ஜீப் நிற்காமல் சென்றது. அதை தனது வாகனத்தின் மூலம் துரத்திச்சென்று, சுக்கிரன்விடுதி பகுதியில் வாகனத்தை மறித்துப் பிடித்தாா்.
வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், கோட்டாட்சியா் ஐஸ்வா்யா வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.