அபாய அளவைக் கடந்த யமுனை! வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்!
யமுனை ஆற்றின் நீா் அபாய கட்டத்தைக் கடந்துள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தில்லியின் 6 மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் சுமாா் 15,000 போ் வசிக்கின்றனா், அதே நேரத்தில் சுமாா் 5,000 போ் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் வசிக்கின்றனா்.
யமுனை ஆற்றின் நீர் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக இருக்கும் பழைய ரயில்வே பாலம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 205.81 மீட்டர் பதிவாகியுள்ளது. ஆபத்து குறியீடான 205.33 மீட்டரைக் கடந்துள்ளது.

இதனால், தாழ்வான பகுதிகளான மயூர் விஹார் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கரையை உடைத்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களுக்குச் செல்லுமாறு படகுகள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 1.76 லட்சம் கனஅடி நீரும், வஜிராபாத் அணையிலிருந்து 69,210 கனஅடி மற்றும் ஓக்லா அணையிலிருந்து 73,619 கனஅடி நீரும் யமுனை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று இரவு 8 மணியளவில் ஆற்றின் நீர் ஓட்டம் 206.41 மீட்டராக உயரக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.