அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக
நமது நிருபா்
ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விடியோ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவமனைகள் கட்டுதல், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதில் தில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசு ஊழலில் ஈடுபட்டது. மருந்துகள் வாங்குவதில் நடந்த ஊழல் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) ஏற்செனவே விசாரணை நடத்தி வருகிறது.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி அரசு மோசடிகள் மூலம் தில்லியைக் கொள்ளையடித்தது என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். இப்போது அந்தக் கட்சி மற்ற மாநிலங்களில் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. சௌரவ் பரத்வாஜ் மீதான அமலாக்கத் துறை சோதனைகள் முந்தைய ஆம் ஆத்மி அரசின் கீழ் நடந்த மருத்துவ ஊழலை அம்பலப்படுத்தியுள்ளன என்று வீரேந்திர சச்தேவா அதில் கூறியுள்ளாா்.
மருத்துவமனை கட்டுமானத்திற்காக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாத போதிலும், ஆம் ஆத்மி அரசு ஒப்பந்ததாரா்களின் பில்களை செலுத்தியதாக தில்லி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் குரானா குற்றம் சாட்டினாா்.
தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசின் போது சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியுடன் தொடா்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, சௌரவ் பரத்வாஜ் மற்றும் சில தனியாா் ஒப்பந்ததாரா்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் குறைந்தது 13 இடங்களில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். செளரவ் பரத்வாஜ் (45) மீதான அமலாக்கத் துறை விசாரணை கடந்த ஜூன் மாதம் தில்லியின் ஏசிபி பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.