செய்திகள் :

`அமானுஷ்யம், பேய்... அன்று விவாகரத்தை நோக்கி..!' - நடிகை மோகினி பர்சனல் | எவர்கிரீன் நாயகிகள்

post image

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை மோகினி.

''நடுராத்திரியில யாரோ கழுத்தை நெரிக்கிற மாதிரி இருக்கும். அலறியடிச்சி எழுந்து பார்த்தா கழுத்தெல்லாம் சிவந்து போயிருக்கும். சில ராத்திரிகள்ல யாரோ கையில பிறாண்டின மாதிரி இருக்கும். கண் விழிச்சுப்பார்த்தா, கையெல்லாம் நகக்கீறலா இருக்கும். உடம்பு பூரா வலிக்கும். எல்லாமே ஏதோ பேய் மாதிரி அமானுஷ்யமா இருக்கும். எத்தனையோ ஜோசியக்காரங்க, பூசாரிங்களைப் பார்த்தேன். 'உனக்கு செய்வினை வெச்சிருக்காங்கம்மா. நீ ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. என்னால அவங்க சொல்றதையெல்லாம் நம்ப முடியல. ஆனா, நடுராத்திரியில நடக்கிறதெல்லாம் ரொம்ப பயமா இருக்கும்.

என் கணவரோட கசின் ஒருத்தங்க, இவரை கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டாங்களாம். அது நடக்கல. அவங்க வாழ்க்கையில நான் குறுக்கே வந்துட்டதா நினைச்சுக்கிட்டு எனக்கு பில்லி சூன்யம் வெச்சு... ஓ மை காட், கிட்டத்தட்ட செத்துப் பிழைச்சேன். பயம், ஹெல்த் இஷ்யூன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு வர டிப்ரஷனாகி, பலதடவை தற்கொலை செஞ்சுக்க ட்ரை பண்ணேன். பிளேடால கை நரம்புகளை கட் பண்ணியிருக்கேன். எலி மருந்தை கூல்டிரிங்க்ல கலந்து குடிச்சிருக்கேன். தூக்குப்போட முயற்சி பண்ணியிருக்கேன். வீட்ல இருந்த மாத்திரைகளையெல்லாம் மொத்தமா முழுங்கியிருக்கேன். அந்த மாத்திரைங்க நூறுக்கும் மேல இருக்கும். இத்தனை செஞ்சும் நான் சாகல.

இந்தப் பிரச்னைகளால என் குடும்ப வாழ்க்கையிலேயும் விரிசல் வந்து, அது டைவர்ஸ் வரைக்கும் போயிடுச்சு. என் கனவுல ஜீசஸ் வந்தப்பிறகு, இது எல்லாமே சரியாச்சு. உடம்பு சரியாச்சு. மனசும் சரியாச்சு. என்னோட பயமும் போச்சு. அதுகூடவே தற்கொலை எண்ணமும் போயிடுச்சு. எல்லாத்தையும்விட முக்கியமா நானும் என் கணவரும், 'நம்மளை நம்பி ஒரு பையன் இருக்கான். அதனால, டைவர்ஸுங்கிற பேச்சுக்கே இடமில்லைங்கிற முடிவுக்கு வந்தோம்.'' - ஒரு பேய்ப்படத்தையும் குடும்பப்படத்தையும் சேர்ந்து பார்க்கிற ஃபீல் கொடுக்கிற இந்தக் கதை, நடிகை மோகினியின் உண்மைக்கதை. இந்த விஷயங்கள் அத்தனையையும் வீடியோ இன்டர்வியூ ஒண்ணுல அவரே மனம் விட்டுப் பேசியிருக்கார்.

நடிகை மோகினி

மோகினியோட பூர்வீகம் தஞ்சாவூர். ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். சொந்தப்பெயர் மஹாலட்சுமி. வீட்ல மஞ்சுன்னு கூப்பிடுவாங்களாம். ரகுவரன், அமலா நடிச்ச ’கூட்டுப்புழுக்கள்’ படத்துல 'பேபி மஞ்சு'ங்கிற பேர்ல சினிமாவுல அறிமுகமாகியிருக்காங்க. 1991-ல 'ஈரமான ரோஜாவுல' பச்சையும் காப்பிப்பொடி கலரும் கலந்த க்யூட் கண்களோட அறிமுகமானப்போ, மஞ்சுவுக்கு 14 வயசுதான். ஒன்பதாம் வகுப்பு சம்மர் ஹாலிடேஸ்ல அந்தப்படம் நடிச்சுக் கொடுத்திருக்காங்க. படத்தோட டைரக்டரும் புரொடியூசருமான கேயார் தான் 'மோகினி'ன்னு பேர் வெச்சிருக்கார்.

''பைவ் ஸ்டார் சாக்லெட் கொடுத்துதான் 'ஈரமான ரோஜாவுல' என்னை நடிக்க வெச்சார் கேயார் அங்கிள். அந்தப்படம் பயங்கர ஹிட். அதே வருஷம் இந்தியில 'டான்சர்'ங்கிற படத்துல அக்‌ஷய் குமாருக்கு ஜோடியா நடிச்சேன். அதுக்கப்புறம்கூட டைரக்டர்ஸ் படம் நடிக்க சொல்லிக் கேட்டா நடிப்பேன். இல்லைன்னா ஸ்கூலுக்குப் போயிடுவேன். அப்படித்தான் இருந்தேன். ஆனாலும், ஃபீல்டுக்கு வந்த ஒரே வருஷத்துலேயே அஞ்சு மொழிகள்லேயும் நடிச்சிட்டேன். ஒரு பாரா அளவுக்கு டயலாக் கொடுத்தாலும் சரி, ஒரு பக்கம் அளவுக்கு டயலாக் கொடுத்தாலும் சரி, ஒரே டேக்ல நடிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அப்படித்தான் நடிச்சேன்''னு கான்ஃபிடன்டா சொல்ற மோகினி, கிட்டத்தட்ட 100 படங்கள் நடிச்சிருக்கார்.

குழந்தை நட்சத்திரமாக

''என் கண்கள் எல்லாருக்கும் பிடிக்கும். கமல் சார், முதல் தடவை என்னைப்பார்த்தப்போ 'என் மனைவி சரிகா சாயல்ல இருக்கீங்க. உங்களோட கண்களும் அவங்களை மாதிரியே இருக்கு'ன்னு சொன்னார். கல்யாணமாகி அமெரிக்காவுல இருந்தப்போகூட என் கண்களை நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. ஒரு கண் டாக்டர், 'உங்க கண்கள்ல பிரவுன் கலர் இருக்கு, க்ரீன் கலர் இருக்கு, ப்ளூ கலர் இருக்கு'ன்னு சொன்னார். அதுக்கப்புறம் யாராவது உங்க கண்களோட கலர் என்னன்னு கேட்டா, உங்களுக்கு எந்தக் கலர்ல தெரியுதோ அந்தக் கலர்தான்னு ஜாலியா சொல்லுவேன்'' என்கிற மோகினியின் சினிமா கிராப், செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்.

சொப்பு முகம், அலை அலையா முடி, சிரிக்கிறப்போ மோகினியோட மேல் உதடு வலதுபக்கம் கொஞ்சம் கூடுதலா சிரிக்கும். 'யாருடா இந்த பியூட்டி'ன்னு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு அஞ்சு மொழிகளும் மோகினியோட கால்ஷீட் கேட்க, பிஸி ஆர்ட்டிஸ்ட் ஆனார் மோகினி. கார்த்திக்கோட நடிச்ச 'நாடோடிப்பாட்டுக்காரன்' மியூசிக்கல் ஹிட். முதல் படத்துல இருந்தே பாடல் காட்சிகள்ல அளவான கிளாமர்க்கு 'யெஸ்' சொல்லியிருப்பார் மோகினி. அவரே ஓர் இன்டர்வியூவுல சொன்ன மாதிரி 'சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா' இருந்ததோட, கிளாமர் ஏரியாவுலேயும் ஸ்கோர் செஞ்சதால படங்கள் குவிய ஆரம்பிச்சது.

பிரசாந்தோட 'உனக்காகப் பிறந்தேன்', கண்மணி, பார்த்திபனுடன் 'உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்', சிவாவுடன் 'சின்ன மருமகள்', ஆனந்த்பாபுவுடன் 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பட்டுக்கோட்டை பெரியப்பா, சேரன் சோழன் பாண்டியன், விக்ரமுடன் 'புதிய மன்னர்கள்', ராம்கியுடன் 'வனஜா கிரிஜா', விஜயகாந்துடன் 'தாயகம்', ஜமீன்கோட்டை என மோகினி நடிச்ச படங்களோட லிஸ்ட் ரொம்ப நீளம்.

நடிகை மோகினி

முதல் படத்துல ஜாலியான காலேஜ் கேர்ள் கேரக்டர். சின்ன மருமகளில் கொடுமைக்கார மாமியாரை ஆட்டிப்படைக்கும் கேரக்டர், நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் காதலில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயிக்கிற கலெக்டர் கேரக்டர், பட்டுக்கோட்டை பெரியப்பாவில் விசுவின் ஆதர்ச 'உமா' கேரக்டர். ஆனந்த்பாபு மீதான காதல், திருமணமாகாத ஏக்கம்னு ஒரு மிடில் கிளாஸ் பொண்ணோட மனநிலையை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வந்திருப்பார். ஜமீன் கோட்டையில் மோகினியின் நடிப்பு படம் பார்க்கிறவங்களை மிரட்டியிருக்கும். காதல் பகடை, ராஜராஜேஸ்வரி, ஒரு பெண்ணின் கதைன்னு சில சீரியல்கள்லேயும் நடிச்சிருக்கார் மோகினி.

மோகினிக்கு 21 வயசுலேயே கல்யாணம் ஆகிடுச்சு. அதுபத்தி சொல்றப்போ, ’’எங்க குடும்பத்துல எல்லா கேர்ள்ஸுக்குமே 21 வயசுல பண்ணிடுவாங்க. எனக்கும் அப்படித்தான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. கரெக்ட்டா அந்த நேரத்துலதான், ஒரு கொலுவுலதான் நான் பரத்தை மீட் பண்ணேன். அந்த கொலு ஃபங்ஷன் நடிகர் விக்ரம் வீட்ல நடந்தது. அந்த நேரத்துல நான் கிட்டத்தட்ட 80 படங்கள் பண்ணியிருந்தேன். எனக்கு பரத்தோட கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

எம்.பி.ஏ படிச்சு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ல வேலைபார்த்துட்டிருக்கிற பந்தாவெல்லாம் அவர்கிட்ட கிடையவே கிடையாது. அவரைப்பார்த்த அடுத்த நாளே என் அப்பா அம்மா கிட்ட பரத்தைப்பத்தி சொல்லி, உங்களுக்கும் அவரைப் பிடிச்சிருந்தா எனக்கு அவரை கல்யாணம் செஞ்சு வையுங்கன்னு சொன்னேன். இதுக்கு நடுவுல விக்ரமோட பிரதரும் பரத் கிட்ட, ‘அது ரொம்ப நல்லப்பொண்ணு. கல்யாணம் செஞ்சுக்கணும்னு விருப்பம் இருந்தா பேசு’ன்னு சொல்லியிருக்காரு. என்னோட நல்ல நேரம், அவங்களுக்கும் பரத்தை பிடிச்சிது. அவரோட பேரண்ட்ஸுக்கும் என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. ஜாதகமும் ஒத்துப்போச்சு. உடனே கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. உடனே கன்சீவ் ஆகிட்டேன். அந்த நேரத்துல நான் மலையாளத்துல நிறைய படங்கள் பண்ணிட்டிருந்தேன். பணம், காசு முக்கியமில்லைங்கிற தெளிவு எனக்கு இருந்ததால, குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்’’னு சொல்ற மோகினிக்கு ரெண்டு ஆம்பளைப்பசங்க இருக்காங்க. முதல் பையனுக்கு 25 வயசு. ரெண்டாவது பையனுக்கு 14 வயசு.

கணவருடன்

’’குழந்தைகளை பேபி சிட்டர் கிட்ட விட்டு வளர்க்கிறதோ, வீட்ல வேலைபார்க்கிறவங்ககிட்ட விட்டு வளர்க்கிறதோ எனக்கு சுத்தமா பிடிக்காது. எங்கம்மா வொர்க்கிங் உமன். ஸோ, என்னை வளர்த்தது என் பாட்டியும், வீட்ல வேலைபார்த்தவங்களும்தான். அதை என் பிள்ளைங்களுக்கு நான் செய்ய மாட்டேங்கிறதுல தீர்மானமா இருந்தேன். என் குழந்தைங்களோட முதல் சிரிப்பை, எட்டு வெச்சு நடக்கிறதை நான் என் கண்ணால பார்க்கணும். வேற ஒருத்தங்க சொல்லி நான் அதை கேட்கக்கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தேன்.

கரியருக்கு பிரேக் எடுத்துட்டு பெரிய பையனை ஹேப்பியா வளர்க்க ஆரம்பிச்சேன். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு எல்லாமே மாற ஆரம்பிச்சிது. என் வாழ்க்கையில நிறைய அமானுஷ்யமா நடக்க ஆரம்பிச்சது. எனக்கு ஏன் கடவுளே இப்படியெல்லாம் நடக்குதுன்னு நான் அழாத நாளே இல்ல. மரணம் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்தேன். டைவர்ஸ் வரைக்கும் போயி மனசு மாறினோம். என் வாழ்கையை காப்பாத்தின கடவுளை ஏத்துக்க நான் கிறிஸ்டியனா மதம் மாறினேன். அப்படி மாறினது என்னோட சொந்த விருப்பம். என்னை யாரும் மனசு மாத்தல; மதம் மாத்தல. இந்த விஷயத்துல என்னோட அப்பாம்மா, கணவர் எல்லாருமே எனக்கு சப்போர்ட்டா தான் நின்னாங்க. ஏன்னா நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண்ணு முன்னாடி பார்த்தாங்க இல்லியா... என் வாழ்க்கையில மறுபடியும் வசந்தம் வந்துச்சு.

ரெண்டாவது தடவை கர்ப்பமானேன். சின்னவன் உண்டானப்போ எனக்கு 33 வயசு. அந்த நேரத்துல கிட்டத்தட்ட 20 கிலோ வெயிட் போட்டுட்டேன். பசு மாடு மாதிரி இருக்கேன்னு ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன். ஆனா, என் ஹஸ்பெண்ட், ’நீ ரொம்ப அழகானவ. வாக்கிங் போ. ஃபிட்னஸ்ல கவனம் செலுத்துன்னு என்னை மோட்டிவேட் செஞ்சாரே ஒழிய, பாடி ஷேமிங் செஞ்சதே இல்ல’’ங்கிற மோகினிக்கு, மறுபடியும் நடிக்கிற இருப்பம் இருக்கு. நல்ல கதை அமைஞ்சா கட்டாயம் நடிப்பேன்னு எதிர்ப்பார்ப்போட சொல்றார்.

வெல்கம் பேக் மோகினி!

(நாயகிகள் வருவார்கள்..!)

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

விடாமுயற்சி (தமிழ்)'விடா முயற்சி'மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கி... மேலும் பார்க்க

`கனவுக்கே பயந்தவங்க தான், பின்னாடி..!’ டைரக்டர் உடன் காதல், கல்யாணம் - நடிகை பல்லவி பர்சனல்ஸ்

தேவனின் கோவில் மூடிய நேரம்நான் என்ன கேட்பேன் தெய்வமேஇன்று என் ஜீவன் தேயுதேஎன் மனம் ஏனோ சாயுதே... - 1986-ல் வெளிவந்த 'அறுவடை நாள்' படத்துல வர்ற இந்தப்பாட்டும் சரி, பாட்டு முழுக்க விதவிதமான உணர்வுகளை வெ... மேலும் பார்க்க

Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பாதாள் லோக் எழுத்தாளர்

பாதாள் லோக் சீரிஸின் திரைக்கதை ஆசிரியரான சுதிப் சர்மா திரைப்படங்களில் வன்முறையை புனிதப்படுத்துவதற்கு எதிராக பேசியிருக்கிறார். மேலும், அவரின் கருத்து அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை வ... மேலும் பார்க்க

Coldplay: லட்சத்தில் குவியும் ரசிகர்கள்; இந்தியாவில் மாஸ் காட்டும் இசைக் குழு! - யார் இவர்கள்?

தீவிர இசை ரசிகர்களுக்கு பரிட்சையமான இசைக் குழு Coldplay. இந்தக் குழு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் நிலையில், மும்பை, அகமதாபாத் என கன்சார்ட் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அகமதாபாத்தில் உள்ள ... மேலும் பார்க்க

Mysskin: ``மன்னிப்புக் கேட்டு உங்கள் எல்லோரையும் கடவுளாக்குகிறேன்.." - இயக்குநர் மிஷ்கின்

'பாட்டல் ராதா' புரொமோஷன் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா. ரஞ்சித் முதலிய இயக்குநர்கள் கூடிய விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பிரயோகித்ததும் இளையராஜா முதலான ... மேலும் பார்க்க

விக்ரம் - அசின் நடித்த `மஜா' பட இயக்குநர் ஷஃபி உடல்நல குறைவால் மரணம்!

மலையாளத்தில் பல காமெடி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஷஃபி நேற்று நள்ளிரவு காலமாகி உள்ளார். இவர் தமிழில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன் ஆகியோர் நடித்த 'மஜா' படத்தை இயக்கியவர் ஆவார். இவருக்கு தற்போது... மேலும் பார்க்க