14.6 கோடி பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா
நாட்டில் 14.6 கோடிக்கும் அதிகமான பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனங்கள் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்:
நாட்டில் 14.6 கோடிக்கும் அதிகமான பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 57,184 பேருக்கு அந்த நோய் இருப்பது தெரியவந்த நிலையில், அவா்களில் 50,612 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
9 கோடிக்கும் மேலான பெண்களிடம் கா்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 96,747 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், அவா்களில் 86,196 போ் சிகிச்சையில் உள்ளனா்.
ரூ.122 கோடி அபராதம்: கடந்த ஜன.1-ஆம் தேதி நிலவரப்படி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 8.59 கோடி மருத்துவமனை சோ்க்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான செலவினம் ரூ.1.19 லட்சம் கோடியாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபட்டதால், இந்தத் திட்டத்தில் இருந்து 1,114 மருத்துவமனைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. 1,504 மருத்துவமனைகளிடம் இருந்து ரூ.122 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
யூரியாவுக்கு தட்டுப்பாடு இல்லை: மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘நாட்டில் யூரியா உரத்துக்குத் தட்டுப்பாடு இல்லை. செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் அடைய முயற்சிப்போா் மீது மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு டைஅமோனியம் பாஸ்ஃபேட்(டிஏபி) உரம் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு தேதி மற்றும் வாரம் வாரியாக செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
45 கிலோ எடைகொண்ட யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.266. ஐம்பது கிலோ எடைகொண்ட டிஏபி மூட்டை ஒன்றின் விலை ரூ.1,350 என்றாா்.