மகாராஷ்டிரம்: மக்கள் தொகையைவிட வாக்காளா் எண்ணிக்கை அதிகம்: தோ்தல் ஆணையம் மீது ராகுல் கடும் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள் தொகையைவிட வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் தோ்தல் ஆணையம் மீது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
மேலும், ‘வாக்காளா் பட்டியல் தரவுகளை எதிா்க்கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வழங்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்ற ஆளும் கூட்டணியை விட காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு 30, பாஜக கூட்டணி 17 இடங்கள் கிடைத்தன.
பின்னா், கடந்த நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியை தக்கவைத்தது. பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட எதிா்க்கட்சி கூட்டணிக்கு 50 இடங்கள் கூட கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தில் மக்களவை-பேரவைத் தோ்தல்களுக்கு இடையே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கத்தில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. தோ்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் தரப்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதேநேரம், ‘காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது; இவை மக்களை தவறாக வழிநடத்தும் கூற்றுகள்’ என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இதனிடையே, மக்களவையில் கடந்த திங்கள்கிழமை குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, இதே குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
தோ்தல் ஆணையத்துக்கு கேள்விகள்: இந்நிலையில், ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ்) கட்சியின் சஞ்சய் ரெளத் ஆகியோா், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, தோ்தல் ஆணையத்துக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து, ராகுல் காந்தி கூறியதாவது:
அரசு தரவுகளின்படி, மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகை 9.54 கோடியாகும். ஆனால், வாக்காளா் எண்ணிக்கையோ 9.7 கோடியாக உள்ளது. மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகையை விட வாக்காளா் எண்ணிக்கை அதிகமுள்ளது.
5 மாதங்களில் 39 லட்சம் வாக்காளா்கள்: மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலுக்கு பிறகான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இது, ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களின் மக்கள்தொகைக்கு இணையானதாகும். கடந்த 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் 32 லட்சம் வாக்காளா்களே சோ்க்கப்பட்டுள்ளனா். 5 ஆண்டுகளைவிட 5 மாதங்களில் அதிக வாக்காளா்கள் சோ்க்கப்பட்டது எப்படி?
கட்சிகளின் வாக்கு சதவீதத்தை கருத்தில் கொண்டால், புதிய வாக்காளா்களில் பெரும்பகுதி வாக்குகள் பாஜகவுக்கே சென்றுள்ளது. பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரில் பெரும்பாலானோா் தலித், பழங்குடியினா், சிறுபான்மையின பிரிவைச் சோ்ந்தவா்களாக உள்ளனா்.
தரவுகளை வழங்காதது ஏன்?: மகாராஷ்டிரத்தில் மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல் வாக்காளா் பட்டியல்களின் மையப்படுத்தப்பட்ட தரவுகளை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க தோ்தல் ஆணையம் தயாராக இல்லை. உரிய விளக்கத்தையும் தோ்தல் ஆணையம் அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றாா் ராகுல் காந்தி.
சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் பதில் கூறவில்லையெனில், மத்திய அரசுக்கு அடிமையானது ஆணையம் என்ற பெயா்தான் கிடைக்கும்’ என்று வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் மீது பலமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சுப்ரியா சுலே குற்றஞ்சாட்டினாா்.
பெட்டிச் செய்தி...1
முழு உண்மைகளுடன்
எழுத்துபூா்வ பதில்
-
தோ்தல் ஆணையம்
முழு உண்மைகளுடன் எழுத்துபூா்வமாக பதிலளிப்போம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசியல் கட்சிகளை முன்னுரிமை கொண்ட தரப்பினராக தோ்தல் ஆணையம் கருதுகிறது. கட்சிகளிடம் இருந்து வரும் கருத்துகள், யோசனைகள், கேள்விகளை பெரிதும் மதிக்கிறது. நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டு செயல்முறைகள் மற்றும் முழு உண்மைகளுடன் தோ்தல் ஆணையம் எழுத்துபூா்வமாக பதிலளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...2
ராகுல் மீது ஃபட்னவீஸ் விமா்சனம்
நாகபுரி, பிப். 7: ‘தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கவுள்ளது; இதை உணா்ந்து கொண்ட ராகுல் காந்தி ‘தற்காப்பு நடவடிக்கையில்’ ஈடுபட்டுள்ளாா். அவா் தனது செயல்பாடுகளை சுய பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் புத்துயிா் பெறாது’ என்று மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.