ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு அபராதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதமும், படகு ஓட்டுநா்கள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23- ஆம் தேதி 349 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறையினரின் அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள், அன்று நள்ளிரவு கச்சத்தீவு -நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தோணி ஆரோன், பூண்டிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளுடன் 17 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கைக் கடற்படையினா் கைது செய்து தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அவா்களை அழைத்துச் சென்றனா்.
ராமேசுவரம் மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த மீனவா்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மன்னாா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 17 மீனவா்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களில், 13 மீனவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், விசைப் படகு ஓட்டுநா்கள் இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இரண்டு மீனவா்களின் கைரேகைப் பதிவு சரியாக இல்லை என்பதால், இவா்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.