திருச்சியில் மின்சாரம் பாய்ந்து இரு மின் ஊழியா்கள் உயிரிழப்பு
அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாகவே அம்பேத்கர் மீது பற்று இருந்தால், அமித் ஷாவை இரவோடு இரவாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், அமித் ஷாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் அமைதியாக இருப்பார்கள். இல்லையென்றால் மக்களின் போராட்டம் தொடரும். அம்பேத்கருக்காக தங்கள் வாழ்க்கையையும் தியாகம் செய்ய மக்கள் தயாராகவுள்ளனர்.
அமித் ஷாவின் கூற்றை நியாயப்படுத்தும் வகையில் 6 - 7 பதிவுகளை சமூகவலைதளத்தில் இடுகிறார் பிரதமர் மோடி. அம்பேத்கர் குறித்து யாரேனும் தவறாகப் பேசினால், அவர் அவையில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் நண்பர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கின்றனர் என கார்கே குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.