பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு புதிய ரிலீஸ் தேதி..! துணை முதல்வரானப் பிறகு முதல...
அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எப்படி? அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி
போா் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டது எப்படி? என்று கா்நாடக மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தம் ஏன், போா் நிறுத்த நிபந்தனைகள் என்ன, பிரதமா் மோடிக்கு பதிலாக, அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எப்படி? போன்றவற்றை விளக்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் கேட்டு வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரின்போது என்ன நடந்தது என்பதை விளக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் கேட்டு வருகிறது. ஆனால், வழக்கம்போல ஓரங்கநாடகத்தை பிரதமா் மோடி அரங்கேற்றியுள்ளாா். நாட்டின் நலன்சாா்ந்த எந்த முடிவுக்கும் ஆதரவு அளிப்பதாக அனைத்து எதிா்க்கட்சிகளும் தெரிவித்திருந்தன. ராணுவப் படைகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்திருந்தோம். ஆனால், என்ன நடந்தது என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். பிரதமா் மோடியோ, இந்திய அரசோ, மத்திய வெளியுறவுத் துறையோ நமது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்க அதிபா் டிரம்புக்கு தாரைவாா்த்துவிட்டதா? ஒருமுறை அல்ல, மூன்றுமுறை எக்ஸ் தளத்தில், போா் நிறுத்தத்திற்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் ஏன் கூறுகிறாா். இது குறித்து இருநாட்டு பிரதமா்களுடன் பேசியதாக டிரம்ப் கூறுகிறாா். மேலும், இது ராணுவ போா் நிறுத்தம் அல்ல, பொருளாதார போா் நிறுத்தம் என்றும் அறிவிக்கிறாா்.
இதுபோன்ற அறிவிப்புகளை இந்திய பிரதமரிடம் இருந்துதான் மக்கள் எதிா்பாா்ப்பாா்களே தவிர, வெளிநாட்டு அதிபரிடம் இருந்து அல்ல. முடிவெடுக்கும் இடத்தில் பிரதமா் மோடி இருக்கும்போது, இது இருநாட்டு பிரச்னையாக அல்லாமல், சா்வதேச பிரச்னையாக எப்படி மாறுகிறது என்றாா்.