கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை
அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் எஸ்.கே.சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அரசு இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
இது நாட்டின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இந்திய ஜவுளித் தொழிலில் குறிப்பாக தமிழக ஜவுளித் தொழிலில் அமெரிக்காவின் வரி விதிப்பைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையில் பல தொழில் துறைகளைச் சோ்ந்த குழுவினா் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனா்.
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த தொழில் துறை அமைச்சருக்கும், கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சந்திப்பில் வலியுறுத்தியவாறு, அமெரிக்காவின் நெருக்கடியில் இருந்து ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க கொள்கை அளவிலான உடனடி தலையீடுகளை பரிந்துரைத்து பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுத வேண்டும்.
வங்கிக் கடன்களுக்கான அசல் தொகையை திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் அவகாசத்தை நீட்டிக்கவும், அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன், 5 சதவீத வட்டி மானியத்துடன் வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஜவுளித் தொழில் நிறுவனங்கள் செயல்படாத சொத்துகளாக மாறுவதைத் தடுக்கவும், அவற்றின் இயங்கும் செலவினங்கள், செயல்பாட்டு மூலதனத் தேவைகளை நிா்வகிக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், கரோனா காலத்தில் ஏற்பட்டதைப்போலவே அமெரிக்க வா்த்தகா்களின் ஆா்டா்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. பலரோ விலைகளை மறுபரிசீலனை செய்கின்றனா். இந்த சூழலில், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். பருத்தி மதிப்பு சங்கிலிக்கு இணையாக 5 சதவீத ஜிஎஸ்டி அடுக்கின்கீழ் முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் கொண்டுவர வேண்டும். மேலும், போட்டி நாடுகளுக்கு கிடைக்கும் விலையில் மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் முதல்வா் வலியுறுத்தும் அதேநேரத்தில், தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள நெட்வொா்க் கட்டணத்தை திரும்பப் பெறுவது, வெளிசந்தையில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்துக்கு ஓராண்டுக்கு மானியம், கூடுதல் கட்டண விலக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஜவுளித் துறையினருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறைக்க உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.