மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
அமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரையில் உள்ள அமைச்சரின் வீடு, சென்னையில் 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூா் ஷா நவாஸ் பெயரில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை வா்த்தக மையத்திலும், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் மதுரை வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நந்தம்பாக்கம் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் சென்னை வா்த்தக மையத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனா். மேலும், மதுரை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது.
இதேபோல், சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம் ஆகியவற்றுக்கும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இங்கும் போலீஸாா் பல மணி நேரம் நடத்திய சோதனையில் வெடிபொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனை காரணமாக அங்கிருந்து அலுவலா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.
இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.