கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
அமைச்சா் மா.சுப்பிரமணியனுடன் மோரீஷஸ் அமைச்சா் சந்திப்பு
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்த மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹம்பிராஜன் நரசிம்ஹென் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை, மோரீஷஸ் நாட்டின் வெளியுறவு துறை, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் மொரிசியஸ் குடியரசின் சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் ஹம்பிராஜன் நரசிம்ஹென் திங்கள்கிழமை சந்தித்தாா்.
அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உயா் மருத்துவ சிகிச்சைகள் குறித்த பயிற்சி, மருந்து கொள்முதல், இந்திய மருத்துவத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள், மருத்துவ சுற்றுலா போன்ற மருத்துவ சேவைகள், வசதிகள், கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.
சந்திப்பின்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆணையா் லால்வேனா, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் விஜயலட்சுமி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநா் சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் சித்ரா, சென்னை -மோரீஷஸ் கெளரவ தூதா் மலையப்பன் நாகலிங்கம் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.